×

சிறந்த சுற்றுலா கிராமமாக ‘உல்லாடா’ தேர்வு

*ஒன்றிய சுற்றுலா அமைச்சகம் அறிவிப்பு *டெல்லியில் இன்று விருது விழா ஏற்பாடு

ஊட்டி : ஊட்டி கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உல்லாடா கிராமம் சிறந்த சுற்றுலா கிராமமாக ஒன்றிய சுற்றுலா துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுலா தினமான இன்று (27ம் தேதி) டெல்லியில் நடைபெறும் விழாவில் இவ்விருது இன்று வழங்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக கொண்டு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில் கிராமங்களில் சுற்றுலா என்றும் கருப்பொருள் கொண்டு வரப்பட்டது.

இதன்படி ஒவ்வொரு நாட்டுக்கும் 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதேபோல ஒன்றிய அரசு இந்தியாவில் சுற்றுலா கிராமங்களை கண்டறியும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கான போட்டி கடந்த பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது. உள்ளூர் கலை, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களை கௌரவிப்பதே இதன் நோக்கமாகும். 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 795 விண்ணப்பங்கள் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில் சிறந்த மலை கிராமம், கடற்கரையோர கிராமம் உள்பட பல்வேறு வகைப்பாடுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திற்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2023ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான பிரிவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கேத்தி ரயில் நிலையம் அமைந்துள்ள விவசாயம், பாரம்பரியம், கலச்சாரம் கடைபிடிக்கும் கிராமம் என கண்டறியப்பட்ட உல்லாடா கிராமத்தை தேர்வு செய்து விருதுக்காக அனுப்பியது. இதனை பரிசீலித்த ஒன்றிய சுற்றுலா துறை அமைச்சகம் ஊட்டி அடுத்த கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உல்லாடா கிராமத்தை சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இந்த விருது உலக சுற்றுலா தினமான இன்று (27ம் தேதி) டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெறுவதற்காக உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையில் குழுவினர் டெல்லிக்கு சென்று உள்ளனர். இவர்களுக்கான பயண செலவு, உணவு செலவு, தங்குமிடம் ஆகியவற்றை மாநில சுற்றுலா துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் மலைச்சொல் கலை இலக்கிய மைய அமைப்பாளர் பாலநந்தகுமார் கூறுகையில், ‘‘உலகின் இரண்டாவது பெரிய பள்ளதாக்கான கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள உல்லாடா கிராமம் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய விஷயம். இக்கிராமத்தின் அருகில் கேத்தி ரெயில் நிலையம் உள்ளது. கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் என அனைத்தும் உள்ளன.

உல்லாடா கிராமத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சுற்றுலா பயணிகள் கவனம் இங்கு திரும்பும். இதனால் சுற்றுலா தொழில்கள் மேம்பட்டு, பொருளாதாரம் உயரும்’’ என்றார். இதையடுத்து சுற்றுலா அலுவலர் உமாசங்கர் கூறுகையில், ‘‘உல்லாடா கிராமத்தில் உள்ள மக்களின் கலாச்சாரம், உபசரிப்பு, பாரம்பரிய நடனம், சுகாதாரம், கோவில் திருவிழா, மலை காய்கறி விவசாயம் உள்ளிட்டவைகளை மையப்படுத்தி விண்ணப்பிக்கப்பட்டது. ஆய்விற்கு பின் நம் மாநிலத்தில் சிறந்த சுற்றுலா கிராமமாக உல்லாடா தேர்வு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

The post சிறந்த சுற்றுலா கிராமமாக ‘உல்லாடா’ தேர்வு appeared first on Dinakaran.

Tags : Ulada ,Union Ministry of Tourism ,Delhi ,Cathy Valley ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...